கூலியைக் கொடுக்க மறுப்பு: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தொழிலாளர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கிணறு வெட்டும் தொழிலாளர்களில், பெண்கள் இருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், தாராமங்கலத்தைச் சேர்ந்த கிணறு வெட்டும் தொழிலாளர்கள் 20 பேர், குமார் என்பவர் தலைமையில் இன்று விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்படி வந்தவர்களில் லட்சுமி, அஞ்சலி ஆகியோர் தங்கள் உடல் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி சமாதானம் செய்தனர்.

பின்னர் ஆட்சியரிடம் தொழிலாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: "நாங்கள் கிணறு ஆழப்படுத்தும் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டுவதற்கு எங்களைத் தொடர்பு கொண்டார். விக்கிரவாண்டி அருகே ஆர்.சி.மேலகொந்தை கிராமத்தில் நிலம் இருப்பதாகவும், அந்த இடத்தில் கிணறு வெட்டுவதற்கு ஒருகன அடிக்கு ரூ.40 என்று பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கடந்த 20ம் தேதியிலிருந்து வேலையைத் தொடங்கினோம். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டோம். கடந்த 25ம் தேதி பணியை முடிக்கும் தருவாயில் 91,632 கனஅடிக்கு உண்டான ரூ.36 லட்சம் கூலியை கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார். பின்னர் இது குறித்து கடந்த 27ம் தேதி விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தோம். பொதுப்பணித்துறை அளவீடு செய்து கொடுக்கப்படும் அறிக்கையின் மூலம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளும் தெரிவித்தனர். அதன்படி கிணற்றை அளவீடு செய்து அறிக்கையை காவல்துறையினரிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால், நாங்கள் கிணறு வெட்டியதற்கான கூலியை வழங்காமல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், அதிகாரத்தை வைத்துக்கொண்டு கூலி கொடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறார். நாங்கள் 50 பேர் குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருதால் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து உரிய கூலியைப் பெற்றுத்தர வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

x