நகர்மன்ற கூட்டத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த திமுக கவுன்சிலர்: நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் என புகார்


ஆத்தூர்: அதிமுக உறுப்பினர்களின் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறி, திமுக நகர்மன்ற உறுப்பினர் பெட்ரோல் பாட்டிலுடன் கூட்டத்தில் பங்கேற்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் நிர்மலா பபிதா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 63 தீர்மானங்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டன. இந்த கூட்டத்தின்போது, 5வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் தங்கவேலு கருப்பு சட்டை அணிந்து கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.

கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அப்போது தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து நகர்மன்ற கூட்டத்தில் காட்டிய அவர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அங்கேயே தீக்குளிப்பதாக கூறி பெட்ரோலை தன் மீது ஊற்ற முயன்றார். அருகில் இருந்த உறுப்பினர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியதோடு, அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தரையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு வந்த மைக்கை பிடுங்கி அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தீர்மான நகலையும் கிழித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பொருட்படுத்தாமல், நகர் மன்ற தலைவர் நிர்மலா பபிதா, 62 தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக கூறி கூட்டத்தை முடித்தார்.

இதன் பின்னர் வெளியில் வந்த கவுன்சிலர் தங்கவேலு, செய்தியாளர்களிடம் பேசும்போது, ”முதலமைச்சர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியும் அதிமுக உறுப்பினர்கள் தரக்குறைவாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இது குறித்து நியாயம் கேட்க சென்றால், திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் என்னை காலால் எட்டி உதைக்கிறார். அதிமுக நகர செயலாளர் மோகன், திமுக நகர செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் நண்பர்களாக செயல்படுவதால், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக எனது வார்டு பொது மக்களை திரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவேன்.” என்றார்.

x