மானாவாரி விவசாயத்துக்கு சிறப்புத் திட்டங்கள்: செப்.9-ல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்


விருதுநகர்: மானாவாரி விவசாயத்துக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி விருதுநகரில் இன்று அளித்த பேட்டியில், “தமிழகத்தில் மானாவாரி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழையால் மானாவாரி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு இதற்கு சிறப்புத் திட்டங்கள் வகுத்து மானாவாரி விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்.

நீர்நிலை மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்தி, கிடைக்கும் நீரை சேமிக்க சிறப்புத் திட்டம் வகுக்க வேண்டும். நீர்நிலைகளை தூர்வார வேண்டும். மானாவாரி விவசாயிகளுக்கு தமிழக அரசு ஊக்க மானியம் வழங்க வேண்டும். விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அதற்காக போதிய அளவு சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க வேண்டும்.

வேளாண்மைக்கு தேவையான இடுபொருள் மானியமும் அரசு வழங்க வேண்டும். பாரம்பரியமிக்க மரபுசார்ந்த வேளாண் விளைபொருட்களை பராமரிக்க வேளாண்துறையில் தனித்துறை தொடங்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி செப்டம்பர் 9-ம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் லிங்கம், தேசியக்குழு உறுப்பினர் ராமசாமி, மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x