குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: 3 நாட்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்


தென்காசி: அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் இன்று குற்றால அருவிகளில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டது, இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை தீவிரம் அடைந்தது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில், நேற்று மழையின் தீவிரம் குறைந்தது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தென்காசி, அடவிநயினார் அணைப் பகுதியில் தலா 4 மி.மீ., கடனாநதி அணையில் 1 மி.மீ. மழை பதிவானது.

ராமநதி அணை, குண்டாறு அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 77 அடியாக உள்ளது. 132 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 117 அடியாக உள்ளது.

தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடந்த 28ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்துச் செல்கின்றனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் குற்றாலம் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள், தனியார் அருவிகளுக்கு திரண்டுச் சென்றனர். குண்டாறு அணைக்கு அருகில் உள்ள மலைப் பகுதி, மேக்கரை பகுதியில் உள்ள மலைப் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலாப் பயணிகள் சென்று குளித்ததால் தனியார் அருவிகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். இதனால் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலைமோதியது. பிரதான அருவியில் அதிக கூட்டம் காரணமாக, நெரிசலை தவிர்க்க சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகியவற்றிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்துச் செல்கின்றனர்.

x