பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் புகாரளிக்கலாம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


தென்காசி: மக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ் அப் மூலம் புகாராக அளிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், புகார் மனுக்கள் அளிக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த திங்கள்கிழமை 1,300-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று காத்திருந்து புகார் மனுக்களை அளிப்பதால் அலைச்சல், காத்திருப்பு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. நாளடைவில் இந்த வசதி கைவிடப்பட்டது. மீண்டும் வாட்ஸ் அப் மூலம் புகாரளிக்கும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இதையடுத்து, கோரிக்கை மனுக்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக 77900 19008 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் குறைகளை இந்த எண்ணுக்கு புகாராக தெரிவித்து பயனடையலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்

x