மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஏராளமான பெண்கள் மனு


கல்பாக்கம்: செங்கல்பட்டு அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமில், மகளிர் உரிமைத் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சதுரங்கப்பட்டினத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ-வான பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில், மகளிர் உரிமைத் தொகை வழங்கக்கோரி ஏராளமான பெண்கள் மனுக்களை வழங்கினர். பின்னர், பட்டா, சிட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை, சாலை சீரமைப்பு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்குதல் ஆகியவை குறித்து மனுக்கள் அளிக்கப்பட்டது. மேலும் கடலோரப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் குறித்தும் மனுக்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், பொதுக் கழிப்பறைகள் அமைத்தல், தெரு விளக்குகள், ரேஷன் அட்டை , மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் ஏராளமான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராதா, ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு, துணைத் தலைவர் பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் கலாவதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

x