இன்னும் பூரண சுதந்திரம் கிடைக்கவில்லை: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் வருத்தம்


ராஜபாளையம்: 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றாலும் பூரண சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை எனவும், வளர்ந்த இந்தியாவாக மாறுவதற்கு மாணவர்கள் நாட்டுக்காக உழைக்க வேண்டும் எனவும் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பேசினார்.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் பொன் விழா ஆண்டு அறிவியல் வளாக திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதிய வளாகத்தை திறந்து வைத்து நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பேசும் போது, “மதுரையில் சவுராஷ்டிரா, நாடார், யாதவர் சமூகம் சார்பில் புகழ் பெற்ற கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் ராஜபாளையத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னரே ராஜூக்கள் கல்லூரியை தொடங்கியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்த கல்வி நிறுவனங்கள் மூலம் அனைத்து சமுதாய மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர். பொன்விழா என்பது இந்தக் கல்லூரி வரலாற்றில் மற்றும் ஒரு மைல்கல்.

முன்னாள் மாணவர்கள் இணைந்து கல்லூரி வளர்ச்சியில் பங்களிப்பது பாராட்டுவதற்குரியது. நெல் பயிரிட்டால் சில மாதங்களில் பலன் கிடைக்கும். மரம் வளர்த்தால் சில ஆண்டுகளில் பலன் கிடைக்கும். கல்லூரி தொடங்கினால் பல நூறாண்டு காலத்திற்கு பலன் அளித்துக்கொண்டிருக்கும். 1947 நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், பூரண சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. தற்போது உலக அளவில் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால், இந்தியா வளரும் நாடு என்றே அழைக்கப்படுகிறது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது 2047-ல் நம் நாட்டை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக உயர்த்தி, வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு இலக்கினை வகுத்து பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு கொண்டிருக்கிறார். பூரண சுதந்திரத்தை அடைய வேண்டிய இந்த காலத்தில் மாணவர்கள் தான் சுதந்திர போராட்ட வீரர்கள். நீங்கள் ஏதாவது ஒரு வகையில் நாட்டுக்காக செயலாற்ற வேண்டும்.” என்றார்.

ராம்கோ குழும நிர்வாக இயக்குநர் பி.வி.நிர்மலா ராஜூ பேசுகையில், “ராம்கோ குழும பங்களிப்புடன் தமிழகத்தில் முதல் நகரமாக ராஜபாளையம் 'கார்பன் சமநிலை' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 54 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் நகரின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்” என்றார். கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பழையபாளையம் ராஜூக்கள் பொது மகமை ஃபண்ட் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

x