“உயிர் பலி ஏற்பட்ட பிறகு குற்றாலத்தில் அரசு எச்சரிக்கை” - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய தண்ணீரை பார்வையிடும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல், உயிர் பலி ஏற்பட்டப் பிறகு குற்றாலத்தில் அரசு எச்சரிக்கை விடுத்து குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

திருமங்கலம் அருகே மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு நீரை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது பெய்து வரும் கனமழையால் திருமங்கலம் தொகுதியில் உள்ள மேலக்கோட்டை ரயில்வே சுரங்க பாதையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் 3 கிலோ மீட்டர் அளவில் சுற்றி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மழை நீர்த்தேங்கினால் உடனடியாக தண்ணீரை பம்பு மூலம் தேங்கிய நீரை அப்புறப்படுத்துவோம்.

தற்போது அப்புறப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால், அரசு தரப்பில் 2 கோடி மக்களுக்கு மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எவ்வளவு பேருக்கு வந்தது என்று தெரியவில்லை. பேரிடர் காலத்தை, பேரிடர் முன்பு, பேரிடர் நடக்கும் பொழுது, பேரிடர் முடிந்தபின் என்று மூன்று கட்டங்களாக பிரித்து பார்த்து மீட்பு பணியில் செயல்பட வேண்டும்.

ஆனால், அவ்வாறு அரசு செயல்படவில்லை. குற்றாலத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள பெருக்கிற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் அங்கு 16 வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி பலியாகியிருக்க மாட்டார். தற்போது கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பதை தற்போது அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

x