முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 17 திமுக எம்எல்ஏ-க்கள் மீதான உரிமை மீறல் குழு நோட்டீஸ் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது மாநிலம் முழுவதும் குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக அப்போதைய எதிர்க்கட்சியான திமுக குற்றம் சாட்டியது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் திமுக முன்னெடுத்தது. இந்நிலையில் 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திற்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்தனர்.

அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த செயல் இருப்பதாக கூறி அப்போதைய சபாநாயகர் தனபால் இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்க சட்டப்பேரவை உரிமை மீறல் குழுவுக்கு அறிவுறுத்தினார். அதன் பெயரில் திமுக எம்எல்ஏ-க்கள் 17 பேருக்கும் உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் உரிமை மீறல் குழு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக சட்டப்பேரவை செயலர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ் செல்லும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 எம்எல்ஏ-க்களின் விளக்கத்தைப் பெற்று சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

x