‘இண்டியா’ கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் | கேஜ்ரிவாலை விடுவிக்கும் வரை ஓயக்கூடாது: ஆர்.எஸ்.பாரதி உறுதி


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தி,ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் தலைமையில் `இண்டியா’ கூட்டணி சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, விசிக சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மதிமுக சார்பில் அந்தரிதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் சார்பில் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.படம்: ம.பிரபு

சென்னை: சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிகிச்சை வழங்காததைக் கண்டித்தும், விடுதலை செய்யக் கோரியும் ஆம்ஆத்மி மற்றும் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் தலைமை வகித்தார். இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: கேஜ்ரிவால் என்ன ஊழல் செய்தார் என்பதை நிரூபிக்கவில்லை. அவரை தேவையில்லாமல் சிறையில் வைத்து உள்ளனர். அவருக்கு போதுமான மருத்துவ வசதிகூட செய்யவில்லை.

இவ்வாறு கொடுங்கோல் செய்தவர்கள் நீண்டநாள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.கேஜ்ரிவாலை விடுவிக்கும்வரை நாம் ஓயக்கூடாது. அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, ‘‘விசாரணை என்ற அடிப்படையில் கேஜ்ரிவாலைக் கைது செய்து சித்ரவதை செய்வது எந்தவகையிலும் நியாயமில்லை. சர்வாதிகார நாடுகளில்கூட இப்படி நடப்பது இல்லை.

தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற நோக்கில் கைது செய்தனர். இன்னும் எழுச்சியாக அக்கட்சி பரிணாம வளர்ச்சி பெறும். ஆம் ஆத்மியுடன் ‘இண்டியா’கூட்டணி உள்ளது. கேஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் அவர் வெற்றி பெற்று, நீதியை மீட்பார்’’ என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக சட்டபேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மதிமுக மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அந்திரி தாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

x