சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம், அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, மீண்டும் பழையஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்தது.அதன்பிறகு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்தும், இந்தகோரிக்கைகள் குறித்து பேசுவதற்குகூட அரசு தயாராக இல்லை.
இதன் காரணமாக, கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் சார்பில் டிபிஐ வளாகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்யும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தொடக்க கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்களை கைது செய்வதுகண்டிக்கத்தக்கது. ஆசிரியர்கள் சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும். பள்ளிக்கல்வித் துறையின் 243-வது அரசாணையால் அதிகபட்சமாக 5,000 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள்.
ஆனால், இந்த அரசாணையால் ஒரு லட்சத்துக்கும்மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்காமல், அவர்களை அழைத்து பேசி, சாத்தியமான சில கோரிக்கைகளையாவது முதல்கட்டமாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், புதிய ஓய்வூதிய திட்டம் (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.