கிணற்றை ஆழப்படுத்தும்போது இரும்பு கயிறு அறுந்து 3 தொழிலாளிகள் உயிரிழப்பு @ விழுப்புரம்


தணிகாசலம், ஹரி கிருஷ்ணன், முருகன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேஉள்ள அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (64). இவர், தனது விவசாய நிலத்தில் உள்ள, சுமார் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றை தூர்வார முடிவுசெய்தார். இதையடுத்து, உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எரையூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரது கிரேன் மூலம் தூர்வாரும் பணி நடந்தது.

திருக்கோவிலூர் அருகேயுள்ள பெருங்குருக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் (52), நரிப்பாளையத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (43), உளுந்தூர்பேட்டை நெய்வனை கிராமத்தைச் சேர்ந்தமுருகன் (34) ஆகியோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்ட இரும்புக் கயிறு வழியாக 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இரும்புக் கயிறுஅறுந்து விழுந்ததில், கிணற்றுக்குள் விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.

அவர்களது உறவினர்கள் அங்கு திரண்டு, 3 பேரின் உடல்களையும் போலீஸார் கைப்பற்ற விடாமல் தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்தவிழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும்போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர்போராட்டம் கைவிடப்பட்டது.

மூவரது உடல்களையும் மீட்டபோலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கிணற்றின் உரிமையாளர் கண்ணன், கிரேன்ஆபரேட்டர் சின்னப்பன் ஆகியோரை கைது செய்தனர்

x