பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ளத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதம்


கோவை: வெள்ளப் பெருக்கின் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் நீர் சூழ்ந்துள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பெருமளவு நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கதலி, ரோபஸ்டா, நேந்திரன் ஆகிய வாழைகளை பயிரிட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வாழைத்தார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் நீலகிரி மாவட்டங்களை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மாயாறு ஆற்றில் வரும் வெள்ளம் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் நீர் சூழ்ந்து கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வாழை தோட்டங்களை நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தண்ணீரில் வாழை மரங்கள் மூழ்கியதால் வாழைத்தார்கள் அழுகி விடும் என்பதால், ஓரளவேனும் இழப்பை சமாளிக்கும் வகையில் விவசாயிகள் மூழ்கிக் கிடக்கும் வாழைத்தார்களை நீரில் மிதந்து சென்று வெட்டி அகற்றி வருகின்றனர்.

x