நாய் பொம்மையுடன் மாநகராட்சி கூட்டத்துக்கு வந்த அதிமுகவினர்: குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளிநடப்பு


தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாகப் போட்டு மோசடி நடந்ததை கண்டித்தும், அதற்கு உரிய விசாரணை நடத்தக் கோரியும் வலியுறுத்தி அதிமுகவினர் இன்றைய மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தாம்பரம் மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று காலை மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வந்து பங்கேற்றனர். பின்னர் கூட்டம் தொடங்கியவுடன் பல்வேறு உறுப்பினர்கள் பாதாளச் சாக்கடை குறித்து சரமாரியாக புகார் தெரிவித்தனர். அதற்கு மேயர் உரிய பதிலளிக்காததால் மேயருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆணையரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு கட்டிட வரைபட அனுமதிக்கு தடையில்லா சான்று பெற்றுள்ளனர் எனவும், இது குறித்து முறையான விசாரணை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, தாம்பரம் நகருக்குள் நாய் தொல்லை அதிகமாக இருப்பதை உணர்த்தும் வகையில் நாய் பொம்மைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பியபடி வெளியேறினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அதிமுகவின் சேலையூர் சங்கர், “தாம்பரம் மாநகராட்சியில் ஆணையரின் கையெழுத்தை போலியாகப் போட்டு அடுக்குமாடி குடியிருப்புக்கு தடையில்லா சான்று பெற்றுள்ளனர். இது போல் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இவற்றை எல்லாம் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதை உணர்த்தும் வகையிலேயே நாய் பொம்மையுடன் நாங்கள் வந்தோம்.” என்றார்.

மேலும், ”கட்டிட அனுமதி மற்றும் தடையில்லா சான்று வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த சம்பவங்கள் நடந்து வருகிறது. இவற்றைக் கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

x