வால்பாறையில் நிலச்சரிவு: வீடு இடிந்த விபத்தில் பாட்டியும் பேத்தியும் பலியான சோகம்!


வால்பாறை: கோவை அடுத்த வால்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் பாட்டியும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வால்பாறையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் தொடர் கன மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக மழை அளவு சற்று குறைந்திருந்த போதும், தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்தது. நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகே இருக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் வசிக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

தொடர் மழை காரணமாக இன்று வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சோலையாறு அணை அமைந்துள்ள பன்னிமேடு இடது கரை பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று அதிகாலை அந்த வழியாக வந்தபோது ராஜேஸ்வரி என்பவரது வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது வீட்டிற்குள் ராஜேஸ்வரி (52) மற்றும் அவரது 14 வயது பேத்தி தனபிரியா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.

உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் வீடு இடிந்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x