சென்னை: அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக்கல்வி ஆணையர் டி.ஆபிரகாம், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது. கூட்டத்தில் சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் பதிவாளர் நியமனம் செய்யப்பட்டதற்கு சிண்டிகேட் உறுப்பினரான திமுக எம்எல்ஏ பரந்தாமன் ஆட்சேபனை தெரிவித்தார். தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, மூவர் குழு அறிக்கையின் அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.