குன்றத்தூர், திருப்போரூர், சிறுவாபுரி, ஆண்டார்குப்பம் முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா


ஆடி கிருத்திகையையொட்டி, குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. (உள்படம்) வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி. | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் நேற்று முன் தினம் ஆடிக் கிருத்திகை விழா தொடங்கியது. இதையொட்டி நேற்று முன் தினம் முதலே ஏராளமான பக்தர்கள் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரத் தொடங்கினர்.

நேற்று அதிகாலை 4.30 மணிக்குநடை திறக்கப்பட்டு கிருத்திகை தின தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டபக்தர்கள் வருகை தந்து கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர். கோயில்நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் எளிதில் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குன்றத்தூரில் உள்ள சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான முருகன் கோயிலில் நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

பின்னர் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு பால்,பழம்,பன்னீர், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து தங்கக் கவசம்சாத்தி ஆராதனைகளும் நடைபெற்றன. பக்தர்களின் வசதிக்காக நேற்று இரவு 11 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது.

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில், 750 பால் குடங்கள் மற்றும் பன்னீர் காவடி உள்ளிட்ட பல வகையான 150 காவடிகளை சுமந்து, கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

சிறுவாபுரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பாலசுப்பிரமணிய சுவாமியை, 1,000 காவடிகள் மற்றும் 500 பால்குடங்கள் சுமந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

x