மேட்டூர் அணை விரைவில் 120 அடியை எட்டுகிறது: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மேட்டூர் அணை நீர்மட்டம் 118.02 அடி எட்டி உள்ள நிலையில், கடல்போல் காட்சியளிக்கிறது. படம்: த.சக்திவேல்

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட உள்ள நிலையில், எந்தநேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படலாம் என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும்கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உள்ளன. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் கடந்த 2 வாரங்களாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலைவிநாடிக்கு 1.53 லட்சம் கனஅடியாக இருந்த நிலையில், இரவு 8மணி அளவில் 90,957 கனஅடியாக சரிந்தது.

அணையின் நீர்மட்டம் நேற்றுகாலை 116.36 அடியாக இருந்தநிலையில் இரவு 118.41 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு87.78 டிஎம்சியில் இருந்து, 90.95டிஎம்சியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குநேற்று முன்தினம் விநாடிக்கு 12,000கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுகாலை முதல் படிப்படியாக உயர்த்தி இரவு 8 மணி முதல் 23,000கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கட்டுப்பாட்டு மையம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளள வான 120 அடியை விரைவில் எட்ட உள்ளது. அணை நிரம்பினால், உபரி நீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், அதனைக் கண்காணிக்கவும் நீர்வளத் துறை சார்பில், அணைவளாகத்தில் வெள்ளநீர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள் ளது. தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் அணை நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், சேலம், ஈரோடு, நாமக்கல்,கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணை ஓரிரு நாட்களுக்குள் 120 அடியை எட்டிவிடும். எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லப்பட வேண்டும். உடமைகள் பாதுகாப்பு உள்பட அனைத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு: இதனிடையே, ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை 6 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், மாலை 6 மணிஅளவில் 50 ஆயிரம் கனஅடியாகநீர்வரத்து சரிந்தது. நீர்வரத்து சரிவு காரணமாக பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவை வெளியில் தெரியத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் ஒகேனக்கல் முதல் நாகமரை வரையிலான தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோர பகுதிகளை வருவாய், வனம் உள்ளிட்ட அரசுத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்

x