திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் கைதான நபர், பாஜக சேர்ந்தவர் என்று போலீஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்டது ஸ்ரீநகர். இங்கு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். இயந்திரம் ஒன்று உள்ளது. கடந்த 20-ம் தேதி இரவு ஏ.டி.எம். இயந்திரத்தில் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை ஹாலோ பிளாக் கல்லால் உடைக்க முற்பட்டுள்ளார்.
நீண்ட நேரம் போராடியும் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முடியாததால் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பினார். இதையடுத்து பணம் எடுக்க சென்ற நபர்கள், ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போலீஸார் மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டது அவிநாசி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் (54) என்பதும், இவர் பாஜக கட்சியின் திருப்பூர் மாவட்ட பிரச்சார அணி செயலாளர் என போலீஸார் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து அவர் இன்று (ஜூலை 29) கைது செய்யப்பட்டார்.
ஆனால் போலீஸார் வெளியிட்ட தகவலை தொடர்ந்து, பாஜக மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “முருகானந்தத்துக்கு கட்சி சார்பில் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரது நடவடிக்கை காரணமாக இரண்டு முறை திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இருந்தும் அவர் திருத்திக் கொள்ளவில்லை. மேலும் கடந்த ஜூன் 22-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அவரது நடவடிக்கை காரணமாக 23-ம் தேதி அவர் வகித்து வந்த கட்சிபொறுப்பு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அவர் சமீபத்தில் தான் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தார்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.