ராமநாதபுரம்: குடிநீர் பிரச்சினையை தீர்க்க கிராம மக்கள் தலையில் முக்காடு அணிந்து வந்து கோரிக்கை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, தலையில் முக்காடு அணிந்து கோரிக்கை விடுத்த வீரவனூர் கிராம மக்கள்.

ராமநாதபுரம்: போகலூர் ஒன்றியம் வீரவனூர் கிராம மக்கள் 3 மாதங்களாக நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விநோதமான முறையில் கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் வீரவனூர் கிராமத்தைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று ஆட்சியர் அலுவலகம் வந்து, குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனக்கோரி தலையில் முக்காடு அணிந்து கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா கூறியதாவது, "தங்கள் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். இங்குள்ள மக்கள் விவசாயக் கூலிகளாகவும், விறகு வெட்டுதல், கரி மூட்டம் போடும் தொழிலும் செய்து வருகின்றனர். வீட்டிற்கு 5 குடம் வீதம் காவிரி கூட்டுக் குடிநீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 3 மாதங்களாக இக்குடிநீர் வராததால், ஒரு குடம் தண்ணீரை ரூ.12-க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். மாதத்திற்கு தண்ணீருக்கே ஆயிரங்களை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் கூலி வேலை செய்யும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

எனவே ஆட்சியர் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எங்கள் கிராமத்திலிருந்து ராமநாதபுரம், பரமக்குடி நகருக்கு பள்ளி, கல்லூரிக்கு மாணவ - மாணவியர் செல்கின்றனர். இவர்களுக்கு பள்ளி, கல்லூரி நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாமல் நேரம் தவறி வருவதால் சிரமப்படுகின்றனர்.

மேலும், பழுதடைந்த மின்மாற்றி, சேதமடைந்த மின்கம்பங்கங்களால் அவ்வப்போது மின் தடையும் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய மின் மாற்றி அமைத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும்" என்று பிரியங்கா கூறினார்.

x