விமர்சித்த அமைச்சர் பெரியகருப்பன்... ‘விளாசிய’ அதிமுக ஒன்றியக் குழு தலைவர்!


சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர்.

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக கட்டிட திறப்பு விழாவை ஒன்றியக் குழு தலைவர் புறக்கணித்ததை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விமர்சித்துப் பேசியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த திவ்யா பிரபு உள்ளார். அண்மையில் ரூ.45 லட்சத்தில் 17 பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளியை வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்து செய்ததையும், போதிய நிதி ஒதுக்காததையும் கண்டித்து ஒன்றியக் குழு தலைவர் திவ்யா பிரபு மற்றும் கவுன்சிலர்கள் வாயில் கருப்புத் துணி கட்டியும், நெற்றியில் நாமமிட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று ரூ.3.50 கோடியில் கட்டப்பட்ட புதிய ஒன்றிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

சிங்கம்புணரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், விழாவில் ஒன்றியக் குழு தலைவர் பங்கேற்காமல் புறக்கணித்தார். தொடர்ந்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: "விழாவை ஒன்றியத் தலைவர் புறக்கணித்தது வருத்தத்துக்குரியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த கட்டிடத்தில் அமர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லை என்று சென்றிருந்தால், அவரது மன உறுதியை பாராட்டுகிறேன். இனி அவர் அலுவலகத்துக்கு வரமாட்டார் என நினைக்கிறேன். தான் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது இந்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் தலைவராக இருக்கிறார். அதனால் புதிய கட்டிடம் வேண்டாம் என்று தாங்கள் நினைக்கவில்லை. சிங்கம்புணரி ஒன்றியத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.90.75 கோடிக்கு பணிகள் நடைபெற்றுள்ளன” என்று அமைச்சர் ஒன்றிய குழு தலைவரை கடுமையாக விமர்சனம் செய்தார்.

என்னை ராஜினாமா செய்ய சொல்ல அமைச்சர் யார்? - ஒன்றியத் தலைவர் திவ்யா பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அலுவலகக் கட்டிட பூமி பூஜையில் தான் பங்கேற்றேன். போதிய நிதி ஒதுக்காததால் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. என்னை ராஜினாமா செய்ய சொல்ல அமைச்சர் யார்? எதற்காக தான் ராஜினாமா செய்ய வேண்டும். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அடுத்து அவர் தேர்தலில் நிற்கட்டும், நானே பதில் சொல்கிறேன். சமத்துவபுரம் வீடுகளுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.1 கோடி செலவழித்துள்ளனர். ஆனால் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் மோசமாக உள்ளன. அந்த நிதியை திருப்பி தருவதாக கூறினர். இதுவரை தரவில்லை.

ஒப்பந்தப்புள்ளி ரத்து, போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கவுன்சிலர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினேன். அதன் பின்னர் எங்களிடம் எந்த அதிகாரியும் பேசவில்லை. ரூ.90 கோடிக்கு என்ன வேலை நடந்துள்ளது என்பதை அமைச்சர் பட்டியல் வெளியிட வேண்டும். அவருடன் நேரடியாக விவாதிக்க தயார். அதிமுக ஒன்றியத் தலைவராக இருப்பதால் என்னை புறக்கணிக்கின்றனர். மக்கள் பணியை செய்ய போதிய நிதி ஒதுக்க வேண்டும். திமுக அரசால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. காட்சியும், ஆட்சியும் மாறும்" என்று திவ்யா பிரபு கூறினார்.

x