50 ஆண்டு போராட்டம்: மலைவேடன் இனச்சான்று வழங்கக் கோரி மதுரை ஆட்சியரிடம் மனு


மதுரையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கத்தினர் மனு அளித்தனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மலைவேடன் இனச் சான்று வழங்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அச்சமூகத்து மக்கள் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஏ.ஜி.ராஜாஜி, மாநிலச் செயலாளர் ஏ.தினேஷ் பாபு, மாநிலப் பொருளாளர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், "மதுரை மாவட்டத்தில் கோட்டைமேடு, மாடக்குளம், விராட்டிபத்து, துவரிமான், மன்னாடிமங்கலம், அவனியாபுரம், வெளிச்சநத்தம், சம்பக்குடி, தேனூர், அச்சம்பத்து, பரவை, கல்லணை, வேடர் புளியங்குளம், வைரவநத்தம், சி.புதூர், கட்டக்குளம், ரிஷபம், அய்யங்கோட்டை, சோழவந்தான், நெடுங்குளம், அலங்காநல்லூர், கரடிக்கல், பெருங்குடி, தாமோதரன்பட்டி, செம்புக்குடிபட்டி ஆகிய கிராமங்களில் எங்களது சமுதாயத்தினர் வசிக்கின்றனர்.

எங்களுக்கு மலைவேடன் இனச்சான்று வழங்கக்கோரி 1972-ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். இச்சான்று பெறமுடியாமல் 8, 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் எங்கள் சமுதாயத்தினர் உள்ளனர். தற்போது 8, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் சான்றிதழ் பெற முடியாமல் அரசு நலத்திட்டங்களை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, தங்களது சமுதாய மாணவர்களின் நலன் கருதி மலைவேடன் இனச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என மனுவில் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

x