செல்போன் டவரில் ஏறி போராடிய நபரை தானாகவே கீழே இறங்கவைத்த திண்டுக்கல் போலீஸார்!


திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர். | படம்: நா.தங்கரத்தினம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி இன்று திடீரென ஒரு நபர் போராட்டம் நடத்தினார். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி டவரில் ஏறியவரை தானாகவே கீழே இறங்கி வர செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சி்யர் அலுவலகத்திற்கு இன்று நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க பழநி அருகே உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற நபரும் வந்திருந்தார். அவர் திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று தேசியக் கொடியை காண்பித்துக் கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பினார். எங்கிருந்து சத்தம் வருகிறது எனத் தேடிய போலீஸார் செல்போன் டவர் மீது பாலமுருகன் ஏறி நிற்பதைக் கண்டனர்.

போலீஸாரால் செல்போன் டவரில் ஏற முடியாத நிலையில், “மேலே எறி வந்தெல்லாம் உன்னைய அழைச்சுட்டு வர முடியாது. நீயே கீழ இறங்கி வந்துட்டா நல்லது. ஆட்சியரிடம் மனுவைக் கொடுத்து கோரிக்கைக்கு தீர்வு காணலாம்” எனக் கூறினர். இதையடுத்து போலீஸாருக்கு தொந்தரவு தராமல் பாலமுருகன் டவரின் உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

டவரில் ஏறி சத்தியாக்கிரகம் செய்ததற்கான காரணத்தை போலீஸாரிடம் விளக்கிய பாலமுருகன், "சித்தையன் கோட்டையில் உள்ள எனது தாத்தாவுக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டுக்கு பேரூராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்ய வேண்டும். நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும். இதுக்காகத்தான் நான் டவர் மேல ஏறி போராட்டம் பண்ணினேன்” என்று சொன்னார். உடனே போலீஸார் அவரை ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு கொடுக்க வைத்தனர். அதன் பிறகு அவரை விசாரணைக்காக தாடிக்கொம்பு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

x