தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்


சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரின் சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது, பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரின் சொத்து விவர அறிக்கையை 29ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஒருபோதும் ஜீரணிக்க முடியாது. துப்பாக்கிச் சூடு நடப்பதைக் கண்டு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதை ஏற்க முடியாது. இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல்துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோரின் சொத்து விவர அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் சோதனை நியாயமான முறையில் நடைபெறுவதோடு, அரசு செயலாளர் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” எனக் கூறி உத்தரவிட்டனர்.

x