காஞ்சிபுரம் மேயரின் பதவி தப்பியது: 51 கவுன்சிலர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தனர்


காஞ்சிபுரம்: மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், 51 கவுன்சிலர்களும் பங்கேற்காததால் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் மேயராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் பதவி வகித்து வருகின்றனர். மகாலட்சுமி மேயராக தேர்வு செய்யப்பட்டபோதில் இருந்தே அவருக்கு எதிராக சக கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஒவ்வொரு முறை மாநகராட்சி கூட்டம் நடைபெறும் போதும், கூட்டத்தில் கடும் சலசலப்பு ஏற்படும்.

இதனால் திமுக சார்பில் அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்எல்ஏ சுந்தர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இதனிடையே எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உடன் திமுக கவுன்சிலர்களும் இணைந்து மேயருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினர். குறிப்பாக மாநகராட்சி விவகாரங்களில் மேயரின் கணவர் யுவராஜின் தலையீடு அதிகமாக இருப்பதால், மேயரை மாற்ற வேண்டும் என்கிற குரல்கள் அதிகரித்தது.

இந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது என கவுன்சிலர்கள் முடிவு செய்ததை அடுத்து, இன்று வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன் அறிவித்திருந்தார். மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும், மேயருக்கு எதிரான மனநிலையில் இருந்த 35 கவுன்சிலர்கள் மற்றும் மேயருக்கு ஆதரவான 10 கவுன்சிலர்களும் காஞ்சிபுரத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவுக்காக கிளம்பிச் சென்றனர். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்திருந்தது.

இந்த நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்திற்கு, 51 கவுன்சிலர்களில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. இதனால் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தற்போதைக்கு இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருந்தாலும், நெல்லை, கோவை மேயர்களைப் போல, காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் மகாலட்சுமியும் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

x