இந்திய அரசியலில் அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட உடைகளுடன் அரசியல் செய்யத் தவறுவது இல்லை. உத்தரபிரதேசத்தில் 3 தினங்களுக்கு முன், அதன் எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ்சிங் யாதவ் உள்ளிட்ட அவரது சமாஜ்வாதியினர், ஷெர்வாணி உடை அணிந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை பொதுமக்கள் எளிதாக அணுக அவர் அணிந்த ஆங்கிலேயரின் கோட், ஷுட் உடைகள் தடையாக இருந்தன. இதை உணர்ந்த மகாத்மா, மதுரைக்கு வந்த போது சட்டையும் இன்றி, வெறும் கதர் வேட்டியை மட்டுமே அணியத் துவங்கினார். இதுவே, அரசியலுக்கான முதல் சாதாரண உடையாக இந்திய அரசியலில் அறிமுகமானது.
இதையே பின்பற்றிய தமிழக அரசியல் கட்சிகள் வெள்ளை வேட்டியும் அதே நிறத்தில் சட்டையும் கதரில் அணிந்தனர். இதன் கால மாற்றமாக, தாம் சார்ந்த கட்சிக் கொடியின் நிறங்களை அந்த வேஷ்டியின் ஓரத்திலுள்ள கரைகளில் அச்சிட்டு காண்பித்தனர். பிறகு, இவர்களில் பலர் அதே வெள்ளை நிறத்தில் காலணிகளையும் விருப்பத்துடன் அணிவது உண்டு.
இதுபோல், ஒரு அரசியல் அடையாளம் வட மாநிலங்களின் அரசியல்வாதிகளுக்கும் உண்டு. இதில் அவர்கள், கட்சி பேதமின்றி வெள்ளை நிறத்தில் குர்தாவும், பைஜாமாவும் அணிந்தார்கள். குர்தாவின் மேல்புறத்தில் ’சாத்ரி’ என இந்தியில் அழைக்கப்படும் அரைக்கை ஜாக்கெட்டையும் அணிவது வழக்கம். இவர்களில், சில தலைவர்களை போல் அவர்களது தொண்டர்களும் அணிந்து வெள்ளை நிறத்துண்டுகளையும் தம் தோளில் போட்டுக் கொள்வது உண்டு.
இந்த துண்டுகளை, கோடை வெயிலில் இருந்து தப்பவும், முகத்தின் வேர்வையை துடைத்து புத்துணர்வு பெறவும் பயன்படுத்துகிறார்கள். இந்த துண்டுகளை காவிநிறத்தில் அணிந்து பாஜகவினர் தம் அடையாளத்தை முதன்முறையாகக் காண்பித்தனர். தற்போது இந்த நிறத்துண்டுகளை, பாஜக ஆளும் மாநிலங்களில் பொதுமக்களும் பயன்படுத்தி தாம் ஆதரவளிக்கும் கட்சியை அடையாளமாகக் காட்டி வருகிறார்கள்.
இச்சூழலில், அனைத்து கட்சிகளின் அரசியல் தலைவர்களில் முஸ்லிம்களின் மட்டும் தனது குர்தா, பைஜாமாவிற்கு மேல் அணியும் உடையாக ஷெர்வாணி மாறியது. குறிப்பாக சமாஜ்வாதியின் நிறுவனர்களில் ஒருவரான ஆசம்கான், சட்டப்பேரவைக்கு கருப்புநிற ஷெர்வாணி அணிந்து வருபவர். இவர் மீதான வழக்குகளில் 2 வருடத்திற்கும் அதிகமாகப் பெற்ற தண்டனையால் தம் எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். தன் தந்தை ஆசமை போலவே ஷெர்வாணி அணியும் அவரது மகன் அப்துல்லா ஆசமின் எம்எல்ஏ பதவியும் பறி போய் உள்ளது. இவர்களை நினைவுபடுத்தும் வகையில் உபி சட்டப்பேரவைக்கு சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ்சிங் ஷெர்வாணி அணிந்து வந்தது கவனத்தை கவர்ந்தது.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு தலைவர் அகிலேஷ், ‘எதிர்க்கட்சிகளுக்கு இங்கு மதிப்பில்லை எனும் போது அவர்கள் ஏன் நல்ல உடைகளை அணிய வேண்டும்?’ எனக் கூறி நேரடி பதிலை தவிர்த்தார். அவர் தம் எம்எல்ஏக்களுடன் ஷெர்வாணி உடைகளில் புகைப்படத்தை தன் ட்விட்டரில் பதிவேற்றமும் செய்துள்ளார். அதில் அகிலேஷ், ‘சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் மீது பெரிய நம்பிக்கையுடன் ஷெர்வாணியில் வந்துள்ளோம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தம் தலைவரை போல் சமாஜ்வாதியின் இதர எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் பலவர்ணங்களில் ஷெர்வாணிகளை அணிந்து வந்தனர். இதற்கானக் காரணத்தை அவர்களிடம் கேட்ட போது, ‘கட்சித் தலைமையின் உத்தரவு’ என சுருக்கமாக முடித்துக் கொண்டனர். இந்த ஷெர்வாணி, ஜமீன்தார், நவாப் போன்ற உயர்சமூகத்தினரின் உடையாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. பிறகு இது இந்திய குடியரசு தலைவராகப் பதவி அமர்பவர்கள் ஷெர்வாணி அணிவதும் வழக்கமானது.
இதற்கும் முன்பாக இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு தாம் அணிந்த ஷெர்வாணியாலும் அடையாளம் காணப்பட்டார். அவரை போலவே சுதந்திரப்போராட்டத் தலைவர்கள் பலரும் மதவேறுபாடுகள் இன்றி ஷெர்வாணியை அணிந்திருந்தனர். காங்கிரஸின் தலைவருமான நேரு, அக்காலங்களில் அரைக்கை ஜாக்கெட்டையும் அணிந்தார். நேருவின் இந்த ஜாக்கெட்டை, 2014 ல் பிரதமரான நரேந்திரமோடி சற்று மாற்றி அதை, பலவர்ணங்களில் அணியத் துவங்கினார்.
இதனால், அவரது அரைக்கை ஜாக்கெட், ‘மோடி ஜாக்கெட்’ எனப் பெயர் கொண்டு பிரபலமானது. தொடர்ந்து பிரதமர் மோடியை போல் அவரது அமைச்சர்களும் இதர கட்சித் தலைவர்களும் கூட அதே போன்ற ஜாக்கெட்டுகளை பல வர்ணங்களில் அணிந்து மகிழ்கிறார்கள். இதனாலோ என்னவோ அந்த பலவர்ண ஜாக்கெட்டுகளை பாஜக தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் அணிவதை தவிர்கின்றனர்.
இந்த ஜாக்கெட்டை, குர்தா, பைஜாமாவிற்கு மேல் வெறும் கருப்பு நிறத்தில் அணிந்து சமாஜ்வாதியினர் தம் அரசியல் அடையாளங்களை முன்னிறுத்தி வருகின்றனர். இந்த உடை அரசியலில் புதிதாக அறிமுகமாகி இருப்பது துறவிகளின் காவிநிற உடை. இதை பாஜகவின் முதல் பெண் துறவி அரசியல்வாதியாகக் கருதப்படும் உமா பாரதி அணிந்தார். இவரைப்போலவே, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் நாடாளுமன்ற எம்பியாக இருந்த காலம் முதல் காவிநிற உடைகளையே அணிகிறார். இதையே அணிந்து தாம் உ.பி முதல்வரான பிறகும் தொடர்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சருமான உமாபாரதி வழியில், பாஜகவில் எம்எல்ஏ, எம்பிக்களான துறவிகளும் தம் காவிநிற உடைகளையே அணிகின்றனர். இந்த உடை அரசியலில் பெண் அரசியல்வாதிகள் வழக்கம் போல் தனித்து விடப்படுகின்றனர். இவர்களுக்காக எனத் தனியாக அடையாளம் காண ஆண்களை போல், அரசியல் உடைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ம.பியின் முன்னாள் முதல்வருமான உமா பாரதி பாணியில் பாஜகவின் பெண் துறவிகள் மட்டும் தமது காவிநிற உடைகளில் தொடர்கின்றனர்.
இந்த உடை அரசியலில் புதிதாக வந்த ஆம் ஆத்மி கட்சியினர், காந்தி, நேருவின் வெள்ளை நிறத் தொப்பியை அணிகின்றனர். நேரு தம் தலையில் அணிந்த வெள்ளைநிறக் குல்லா, காங்கிரஸின் அடையாளம். ஆனால், இதை பொட்டுக்கொள்ள கூச்சப்படும் காங்கிரஸார் அதை, முக்கிய நாட்களில் மட்டும் அணிகின்றனர். இந்த குல்லாவை உபியின் சமாஜ்வாதியினர், சிகப்பு நிறத்தில் அணிகின்றனர். இதனிடையே, வெள்ளைநிற சட்டையும், பேண்டும் அரசியல்வாதிகள் இடையே மெல்ல நுழைந்து விட்டது. இதை கதரில், வெள்ளிநிறத்தில் காலணி அணிவதும் அரசியல்வாதிகளின் புதிய அடையாளமாகி வருகிறது. இந்த வகை உடையை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் கட்சியினராலும் அணியப்படுகிறது. ஒருவகையில் இந்த வெள்ளைநிறப் பேண்ட் சர்ட் உடை, தேசிய அளவில் அனைவரது அரசியல் முகமாகவும் மாறத் துவங்கி உள்ளது.
அலிகர் முஸ்லிம் பல்கலைகழக சீருடை
நாட்டின் எந்த கல்வி நிலையங்களிலும் இல்லாத வகையில், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் மாணவர்களின் சீருடையாகவும் ஷெர்வாணி உள்ளது. இதன் துணைவேந்தர் முதல் பேராசிரியர்கள் கூட ஷெர்வாணிதான் அணிகின்றனர். சர் சையது அகமது கான் எனும் முஸ்லிம் அறிஞரால் 150 வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட இது, மத்திய பல்கலைகழகங்களில் ஒன்றாகும். இதன் துவக்கம் முதலாகவே இந்த சீருடையான ஷெர்வாணி சமீப காலங்களாக கட்டாயப்படுத்தப்படுவதில்லை. எனினும், அதன் பட்டமளிப்பு விழாவில் கருப்புநிற ஷெர்வாணி அணிந்து தம் பட்டங்களை மாணவர்கள் பெறுவது அவசியம்.
இதற்காகவே அதன் சேர்க்கையின் போது மாணவர்களுக்கு மானிய விலையில் ஒரு கூப்பனை நிர்வாகம் அளிக்கிறது. இதை அலிகரின் சில தையல் கடைகளில் அளித்தால் அவர்கள் ஷெர்வாணியை தைத்து கொடுக்கிறார்கள். இதற்கான தொகையை தையல் கடைக்காரர்களுக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைகழக நிர்வாகம் அளிக்கிறது.