மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியாக உயர்வு: நீர்வரத்து 1.53 லட்சம் கன அடி!


சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.53 லட்சம் கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 116 அடியைக் கடந்து வேகமாக அதிகரித்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, நுகு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், காவிரி ஆற்றில் சுமார் ஒன்றரை லட்சம் கன அடி நீர் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து 100 அடியை தாண்டியது.

தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வந்ததால் கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 16 அடி உயர்ந்து, இன்று காலை நிலவரப்படி 116 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு 1.34 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 1.55 லட்சம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இருப்பினும் சிறிது நேரத்தில் நீர்வரத்து 1.53 லட்சம் கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் தண்ணீர் இருப்பு தற்போது 87.77 டிஎம்சியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் முழு கொள்ளளவான 93.47 டிஎம்சியை மிக விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

x