சென்னையின் அனைத்து சாலைகளிலும் கழிவுகளை அகற்றும் பணியை செப்டம்பருக்குள் முடிக்க திட்டம்: மாநகராட்சி ஆணையர் உறுதி


சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 418 கிமீநீளத்துக்கு 488 பேருந்து சாலைகள் உள்ளன. இவற்றில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சீராக செல்வதற்கும், நடைபாதைகளில் மக்கள் சிரமமின்றி செல்வதற்கும் ஏற்ப 22-ம் தேதி இரவுமுதல், மாநகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் வட்டார துணை ஆணையர்கள் இரவு முழுவதும் நேரில் சென்று கண்காணித்து வருகின்றனர். இதுவரை 1,000 டன்னுக்கு மேற்பட்ட குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பேருந்து தட சாலைகளில் உள்ள குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணிகள் கடந்த 22-ம் தேதி முதல் 3 மண்டலங்களில் சோதனை அடிப்படையில் நடைபெற்று வருகிறது

.இ்ப்பணி இன்றுமுதல் மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் விரிவாக்கப்படுகிறது. இப்பணி வரும் ஆக.10-ம்தேதி வரை நீடிக்கும். அதன் பிறகுஉட்புற சாலைகளிலும் தீவிர தூய்மைப்பணி தொடங்கப்படும். அனைத்துசாலைகளிலும் தீவிர தூய்மைப்பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தீவிர தூய்மைப் பணியுடன், கைவிடப்பட்டு சாலையோரம் கிடக்கும் பழைய வாகனங்களும் அகற்றப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் மீது காவல்துறையிடம் தடையில்லா சான்று பெற்று, ஏலம் விடப்பட உள்ளது. தொடர்ந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டு கைவிடப்பட்ட வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. எந்த வாகனமும் விடுபடாது அகற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x