தூத்துக்குடி: திமுக அரசு மீது மக்களுக்கு உள்ளகோபத்தை மறைக்கவே, மத்தியஅரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது என, அதிமுகபொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான கே.பழனிசாமி கூறினார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜுவின் தந்தை செல்லையா சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி நேற்று கோவில்பட்டி அருகே கே.சிதம்பராபுரத்தில் உள்ள கடம்பூர் ராஜுவின் இல்லத்துக்குச் சென்று, ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, சென்னை திரும்பும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளன. கடந்த 200 நாட்களில், 595கொலைகள் நடந்துள்ளன. திமுகஅரசு காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிவிட்டது.
கஞ்சா மற்றும் போதைப் பொருட்களால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிப்பிரமுகர்கள் தொடர்ந்து கொலைசெய்யப்படுகின்றனர். பொதுமக்கள், அரசியல்வாதிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது.
திமுக அரங்கேற்றிய நாடகம்: மத்திய அரசு, தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்கவில்லை என்று கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஏற்கெனவே மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடந்தபோது, தமிழகத்துக்கு எவ்வளவு நிதி கிடைத்தது? எத்தனை திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தார்கள்? திமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதை மறைக்க திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுளனர். மத்தியில் எந்த அரசு வந்தாலும், தமிழகத்துக்கு உரிய நிதியைக் கொடுப்பதில்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக திமுக ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது.
கால்நடை பூங்கா: கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்வர் குரல் கொடுக்கிறார். அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,050 ஏக்கரில் கால்நடைப் பூங்கா அமைக்கப்பட்டது. அது 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பாழடைந்துக் கிடக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முடக்கி வைத்திருக்கிறார்கள்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் பெண் அதிகாரியை திமுகநிர்வாகி நாற்காலியால் அடிக்கமுற்பட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.