விவசாயிகளுக்கு விதை நெல், உரம், கடனுதவி தர வேண்டும்: தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை


சென்னை: காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்கள், வங்கிக் கடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய தண்ணீர் திறக்கப்படாததால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்தனர். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யப்படாததால், விவசாயிகள் உரிய நிவாரணமும் பெற இயலவில்லை.

சம்பா, தாளடி காலங்களில் ஒருபுறம் நீரின்றி பயிர் கருகியது. மறுபுறம் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காலத்தே திறக்காததால், அறுவடை செய்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து பாதிக்கப்பட்டன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தையும் அரசு முழுமையாக வழங்கவில்லை.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக இயற்கையின் கருணையால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு வேறு வழியின்றி உபரி நீரை காவிரியில் திறந்து விடுகிறது. அதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. சம்பா சாகுபடிக்கு தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடிக்கு தேவையான குறுகியகால, நீண்டகால விதை நெல் ரகங்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இருவகை விதை நெல்களையும் உடனடியாக தட்டுப்பாடின்றி வேண்டிய அளவு வழங்க வேண்டும். சம்பா பாசனத்துக்கு தேவையான உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்துவிட்டதால், பயிர் கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளுக்கு பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு நடப்பு பருவத்துக்கு பயிர் கடன் வழங்கப்படாது என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் உள்ளனர். எனவே, கடந்த ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காக எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும்.

காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குளம், குட்டை மற்றும் கடைமடை பகுதி வரை செல்ல ஏதுவாக, வாய்க்கால்கள், மதகுகளை பழுதுநீக்கி சரிசெய்யவும், கரைகளை பலப்படுத்தவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

x