பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம் திமுக தலைவர் ஸ்டாலின் மனதுக்கு தற்போது மிகவும் தூரத்தில் இருக்கிறது. ஆனால் இன்னொரு கமலாலயம் அவரது மனதுக்கு வெகு நெருக்கமானதாகவும், பிடித்தமானதாகவும் இருக்கிறது. அது திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தெப்பக்குளமான கமலாலயக் குளம்.
நேற்று திருவாரூர் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் தனது மனதிற்கு மிகவும் பிடித்த அந்த கமலாலய குளத்தின் கரையில் வெகுநேரம் அமர்ந்து குளத்தை ரசித்து, தனது தந்தையின் நினைவை அசைபோட்டு இருக்கிறார். தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவாலயத்திற்கு சென்று மீண்டும் திருவாரூர் திரும்பிய ஸ்டாலின் கமலாலயக் குளத்தை பார்த்ததும் காரை விட்டு இறங்கி குளத்தின் கரையில் அமர்ந்தார். டி.ஆர்.பாலு, பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தனது சகாக்களுடன் அமர்ந்து, அதை பற்றிய நினைவலைகளையும் அசை போட்டார். பிறகு படகு மூலம் குளத்தில் நடுவில் இருக்கும் கோயிலுக்கும் சென்று வந்தார்.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம் கடல் போலத் ‛தோற்றமளிக்கும்'. ஆனாலும் அது குளம்தான். அதன் ‛நடுவண்' கோவில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். இன்று அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். என் நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்'' என தெரிவித்துள்ளார்.
இந்த கமலாலய குளத்திற்கும் கருணாநிதிக்கும் நெருக்கமான பிணைப்பு இருந்தது. 1936-ம் ஆண்டு ஐந்தாம் வகுப்பில் தன்னை சேர்க்கவில்லை என்றால் கமலாலயம் தெப்பக் குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதாக கூறி தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்காரை மிரள வைத்தார் கருணாநிதி.
பரந்து விரிந்த கமலாலய குளத்தில் கருணாநிதியும் அவரது நண்பர் தென்னனும் நீச்சல் அடித்து பல நாட்கள் விளையாடியிருக்கின்றனர். ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்ல முயன்றபோது பாதி தூரத்தில் உடல் சோர்வடைந்த நிலையில் இனி செல்ல வேண்டாம், திரும்பி விடுவோம் என தென்னன் கூறியதையும், பாதி வந்துவிட்டோம். திரும்பி செல்வதை விட மறுகரைக்கு சென்று அடையலாம் என தன்னம்பிக்கையுடன் நீச்சல் அடித்து தனியே எதிர்கரைக்கு சென்று அடைந்ததையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.
திருவாரூர் தேரை ஓட வைத்ததும், கமலாலயக் குளத்தில் கரைகளை சீரமைத்து தந்ததும் நாத்திகரான கருணாநிதிக்கு திருவாரூரின் மேல் இருந்த ஈர்ப்பை உலகுக்கு உணர்த்தியவை. தனது இறுதிக்காலத்தில் திருவாரூரை தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர். அப்படி தன் தந்தை அளவற்ற பாசம் வைத்திருந்த திருவாரூரில் நேற்று தனது நேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின்.