புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர்: பேச்சுவார்த்தை தோல்வி


கோப்புப்படம்

புதுச்சேரி: ஆரோவில்லில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் ரகசியமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசினார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் விஷயத்தில் முதல்வர் தனது கருத்தை காட்டமாக தெரிவித்தார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். தற்போது முதல்வர், பாஜக அமைச்சர்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், பாஜக ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர், அசோக் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இருமுறை டெல்லி சென்று தங்கள் புகார்களை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்தனர். ஆனால் இருமுறையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்திக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதனால் மத்திய அமைச்சர் பாஜக அலுவலகத்துக்கு வந்தபோதும் இவர்கள் யாரும் வரவில்லை.

அதேநேரத்தில் முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்வதையை முற்றிலும் தவிர்த்து உள்ளார். தேசிய ஜனநாயக்கூட்டணி கூட்டம், பிரதமர் பதவியேற்பு தொடங்கி தற்போது நடந்த நிதி ஆயோக் கூட்டம் வரை டெல்லிக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் வலம் வரத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், மீண்டும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா புதுச்சேரிக்கு வந்தார். அவரிடம் இச்சூழல் தொடர்பாக இன்று விசாரித்தபோது, “கூட்டணித் தொடர்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி வந்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முதல்வர் ரங்கசாமியை ஆரோவில்லில் இன்று ரகசியமாக சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரிடம் கூட்டணியில் நம் கட்சிகள் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என விளக்கமாக பேசியுள்ளார்.

ஆனால், முதல்வர் ரங்கசாமி அவரிடம் மிகவும் காட்டமாக தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக பாஜக எம்எல்ஏக்கள் பற்றியும், அவர்கள் பதவிக்காகவும் என்னிடம் பேச வராதீர்கள் என கருத்தை உறுதியாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து மவுனமாக நிர்மல்குமார் சுரானா புறப்பட்டு சென்றுள்ளார்.

தற்போது சட்டப்பேரவைக் கூடும் நிலையில் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

x