கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை இணைந்து எடுத்த நடவடிக்கையில் மேல்மலை கிராமப்பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகளை மூட உத்தரவிடப்பட்டது. மேலும் சில விடுதிகளில் நடத்திய சோதனையில் கஞ்சா, போதை காளான் உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் போதைபொருட்கள் பயன்பாடு அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுற்றுலாபயணிகள் என்ற போர்வையில் வரும் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டுவந்து விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலாபயணிகளுக்குத் தருவதாக புகார் எழுந்தது. இதன்அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டவர், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் அதிகம் தங்கும் வட்டக்கானல் பகுதியில் வருவாய்த்துறையினர், போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த விடுதிகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டன. மேலும் போதைப்பொருட்களும் விடுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், சுற்றுலாத்துறையினர் இணைத்து கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில், வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர், போலீஸார், ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுலாத்துறை அலுவலர்களுடன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கூக்கால் கிராமத்தில் மலைமுகடுகளின் அருகில் அரசு வருவாய் நிலங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மண் வீடுகளில் நடத்திய சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பூம்பாறை மலைக்கிராமத்தில் விவசாய நிலத்தில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் கண்டறியப்பட்டது. அங்குள்ள அறைகளில்
கஞ்சா, போதைகாளான் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகளும் மூடப்பட்டன.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், "கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விடுதிகள், டென்ட் ஹவுஸ் ஆகியவற்றை கண்டறிந்து சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துத்துறை அதிகாரிகளையும் இணைத்து நடைபெறும் சோதனைகள் இனியும் தொடரும்" என்றனர்.