மோசமான அரசியலுக்கு முகம் தருகிறார் சீமான்!


நாஞ்சில் சம்பத்

உடல்நலம் குன்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாஞ்சில் சம்பத் அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதைவிட உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள் என அன்புக் கட்டளையிட்டு அவருக்கு அணை போட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆனாலும் கன்னியாகுமரியில் தனது இல்லத்தில் இருந்தாலும், நாஞ்சில் சம்பத்தின் உள்ளம் எல்லாம் ஈரோட்டையே சுற்றி வருகிறது. இப்படியான சூழ்நிலையில் அவரிடம் ‘காமதேனு’வுக்காகப் பேசினோம்.

நாஞ்சில் சம்பத்

உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?

உடல்நிலையைப் பொறுத்தவரை நலிவு நீங்கி பொழிவு பெற்றுவருகிறேன். அனைத்துப் பாதிப்புகளில் இருந்தும் விடுதலை ஆகிவிட்டேன். இன்று புதிதாய் பிறந்தேன் எனச் சொல்லும் அளவுக்கு என் உடல் நலனும் உள்ள நலனும் சீராக இருக்கிறது. வாசிப்பு, எழுத்து என இயங்குகிறேன். வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்கிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். மாத்திரைகள் மட்டும் கொஞ்சம் காலம் சாப்பிட வேண்டும் என நினைக்கிறேன். சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன்.

முதல்வரே நலம் விசாரித்தாரே... அந்த தருணம் பற்றி சொல்லுங்கள்

முதல்வரே நலன் விசாரித்ததில் நான் நெகிழ்ந்து போனேன். அவர் நலன் விசாரிக்கும் நிலைக்கு என் உடல் ஆகிவிட்டதே என்னும் கவலையும் வந்தது. காரணம், யாருக்கும் சுமையாக இருக்கக்கூடாது என நினைப்பவன் நான். முதல்வரே நலன் விசாரித்ததால் நாடு தழுவிய அளவில் என் மீது அக்கறை கொண்டவர்களின் கவனத்தை அது ஈர்த்து, பலரும் நலன் விசாரித்தனர். நலிவுற்று, நினைவிழந்த என்னை முதல்வர் நலன் விசாரித்ததன் மூலம் ஒரு புதிய நம்பிக்கை என்னுள் உதயமானது.

“தேவைப்பட்டால் சென்னைக்கு வாருங்கள் சிகிச்சை மேற்கொள்ளலாம்” என அன்பாகச் சொன்னார் முதல்வர். “என் மகன் மருத்துவராக இருப்பதால் அதற்கு அவசியமிருக்காது” என்றேன். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி டீனிடம் பேசி, ஒரு குழுவே அமைத்து என்னை நன்கு கவனித்துக்கொண்டார்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு செல்வாக்கு கூடிவருவதாகச் சொல்லப்படுகிறதே?

2024 மக்களவைத் தேர்தலுக்கு திமுகவின் வெற்றிக்கு அச்சாரமிடும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும். எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளரை ஆதரிக்கும் நிலையில், வாக்காளர்கள் இருப்பது போல் மாயத்தோற்றத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றனர். தமிழக மக்களுக்கு எதிரான போக்கைக் கடைபிடிப்பதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது.

உதிரம் சிந்தி பெற்ற உரிமைகளில் ஒன்று இட ஒதுக்கீடு. அதில் பத்து சதவீதத்தை உயர் சாதி இந்துகளுக்கு என மோடி கொடுத்து இருப்பதை அதிமுக அங்கீகரிக்கிறது. சனாதானத்தை நியாயப்படுத்தி ஆளுநர் தொடர்ந்து பொதுவெளியில் பேசிவருகின்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட், “ஆளுநர் இதுபோன்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது” என்று தெளிவுபடுத்தி உள்ளார். கூச்சமும், குற்ற உணர்வும் இன்றி ஆளுநர் அதைத் தொடர்ந்து செய்கிறார்.

ஒன்றிய அரசு தயாரித்த நிதிநிலை அறிக்கையைத்தான் ஜனாதிபதி வாசிக்கிறார். அதேபோல் தமிழக அரசு தயாரித்துத் தரும் அறிக்கையைத்தான் ஆளுநர் படிக்கவேண்டும். அதன் பகுதிகளை அப்புறப்படுத்தவோ, சேர்க்கவோ அவருக்கு அதிகாரம் இல்லை. தபால்காரர் வேலையை பார்க்க வேண்டிய ஆளுநர் அத்துமீறுகிறார்.

இதை எதிர்கட்சியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவில்லை. ஆளுநரைப் போற்றுகிறார். இன்று கர்ப்பரேட் பாசிசம் கருவாகி, உருவாகி விட்டது. அதானி கும்பலால் இந்தியப் பொருளாதாரம் தரைமட்டம் ஆகிவிட்டது. அந்தக் கும்பலோடு கைகோத்துக்கொண்டு சமூக நல்லிணக்கத்துக்கும் சகிப்புத் தன்மைக்கும் எடப்பாடி பழனிசாமி வேட்டு வைக்கும் செயலைச் செய்கிறார்.

கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு, ஈரோடு இடைத் தேர்தல் ஆளும்கட்சிக்கு எதிராக இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார் எடப்பாடி. அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். அதெல்லாம் எடுபடாது. முதல்வரை மகிழ்விக்கும் தீர்ப்பாக ஈரோடு கிழக்கு இருக்கும்.

நாஞ்சில் சம்பத்

ஈரோடு கிழக்கில் காங்கிரஸுக்கு சாதகமான அம்சமாக எதைப் பார்க்கிறீர்கள்?

திமுக அரசின் சாதனைகளே போதும். இதுபோக இங்கு போட்டியிட்டு வென்று மறைந்த ஈ.வெ.ரா திருமகன் மீது எந்த அதிருப்தியும் மக்களுக்கு இல்லை. இப்போது போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீதும் அதிருப்தி எதுவும் இல்லை. பெரியார் குடும்பம் என்பதெல்லாம் பலம். ஈரோடு கிழக்கில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம்.

பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிறாரே?

பிரபாகரன் இறந்தார் என்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. நந்திக்கடல் பகுதியில் சடலமாகக் கிடந்த பிரபாகரன் எனக் காட்டப்பட்டதில் கண்கள் பிளாஸ்டிக் கண்ணாக இருந்தது. சேகுவேராவைக் காட்டிலும் மகத்தான தலைவர் அவர். எந்த உலோகமும் ஊடுருவ முடியாத பாதுகாப்பான வண்டியில் தான் பயணம் செய்தார். பிரபாகரன் உயிருக்கு ஒரு முடிவு வரும் என்றால் அவரோடு உடன் இருப்பவர்கள் அந்த முடிவை அவருக்கு முன்பே எட்டியிருக்க வேண்டும். அப்படி யாரும் இறந்ததாகத் தகவல் இல்லை.

பிரபாகரன் உடலை மரபணு சோதனை மூலம் நிரூபித்து அந்த உண்மையை இலங்கை நாடாளுமன்றம் உலகறிய அறிவித்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. ஆக, தம்பி பிரபாகரன் இறந்ததற்கு எந்தத் தடயமும் இல்லை. அவர் வருவார் என்று பழ.நெடுமாறன் நம்புகிறார். அவர் பிரபாகரன் குடும்பத்தோடு தொடர்பு வைத்திருக்கிறார். நியூயார்க் நாடுகடந்த தமிழீழ அரசவையில் ஒருமுறை உரையாற்றப் போயிருந்தேன். அப்போது கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 56 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தேன். அவர்களும்கூட தலைவர் பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார் என்றே சொன்னார்கள். அது இப்போதும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவும் சின்னம் வைப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறதே?

சீமான் போன்றவர்கள் மோசமான அரசியலுக்கு முகம் தருகிறார்கள். உலகின் மிக முக்கிய நகரம் துபாய். அங்கு கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரமே இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுக்கு அங்கே வீடு இருக்கிறது. கடலில் பத்து மீட்டர் ஆழத்திற்கு மணலைப்பரப்பி மேடாக்கி தீவுக்கூட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய பேரீட்சை மரம் இருப்பது போல் அந்தத் தீவு இருக்கும். 4 ஆயிரம் வீடுகளும், மிகப்பெரிய ரிசார்ட்டும் அதில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் குடியேறிவிட்டது நண்பர் சீமானுக்குத் தெரியுமா? ஹோட்டல் நிறுவனம் நிறுவனம் ஒன்று துபாயில் கடலில் ஒரு ஹோட்டலைக் கட்டிக்கொண்டு இருக்கிறது.

ஜப்பானில் கன்சாயி என்னும் இடத்தில் விமான நிலையம் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு ஐரோப்பாவின் கடலில் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் வான் உயர் வள்ளுவன் சிலையும், சுவாமி விவேகானந்தர் நினைவில்லமும் கடலில் தான் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் பாலம் உள்ளது. மும்பையில் அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை உள்ளது. அதுவும் ஒரு நினைவிடம் தான்.

ஆனால், கருணாநிதிக்கு பேனா என்றதும், அவரை அவமதித்து சுகம் காண நினைக்கும் கூட்டம் பதறுகிறது. கருணாநிதி அழுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து ஒரு அறிவு இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர. ஏய் சிங்கத் தமிழ்நாடே... நீ சிலந்திக் கூடாக ஆனது எப்போது? என பராசக்தியில் அவரது பேனா கனல் கக்கியது. அந்தக் கனல் இன்றும் அணையாமல் உள்ளது.

அவருக்கு நினைவு இல்லம் எழுப்புவது என்பது அடுத்து வரும் தலைமுறைக்கு இப்படிப்பட்ட நபர்கள் எல்லாம் வாழ்ந்த நாடு எங்கள் தமிழ்நாடு என்று உணர்த்துவதற்குப் பயன்படுமே தவிர அவரை விளம்பரப்படுத்த அல்ல. இதைப்பற்றி புரியாமல் விமர்சிப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. காலஞ்சென்ற தலைவனை காயப்படுத்துவது ஏற்புடையது அல்ல.

x