அரசால் சட்டம் - ஒழுங்கை சமாளிக்க முடியவில்லையா?


கோவை கொலையாளிகள்

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் சொல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் அவர்கள் சொல்வதை வழக்கமான அரசியலாக கடக்கமுடியவில்லை. அந்தளவுக்கு கொலை, கொள்ளை என நித்தம் வரும் செய்திகள் மக்கள் மனங்களில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

சென்னை நகைக்கடைக் கொள்ளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளை, கோவையில் நீதிமன்றம் அருகில் பொதுமக்கள் மத்தியில் கொடூரக் கொலை ஆகிய சம்பவங்களே தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரத்துக்கு சாட்சியம் சொல்கின்றன.

இந்தச் சம்பவங்களை மேற்கோள் காட்டிப் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இது போன்ற சம்பவங்களை பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன், நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் நிலை இருப்பதை உணரமுடிகிறது” என்று கடுமையாக சாடினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக காவல்துறையும், திமுக அரசும் போதுமான கவனம் செலுத்துவதில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என்று சொல்பவர்கள், “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில், உளவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் காட்டிய அலட்சியம் தான் கலவரத்துக்கான விதையானது” என்கிறார்கள்.

ஓசூர் அருகே கோபச்சந்தரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவுக்கு அனுமதி தருவதில் காட்டப்பட்ட அலட்சியத்தால் இளைஞர்கள், பார்வையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். போலீஸார் மீது கல் வீச்சு, இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என கலவரம் பெரிதானது.

இதுவும் உளவுத்துறையின் தோல்விக்கான உதாரணமே. எதிர்க்கட்சிகள் இதை எடுத்துச் சொன்னதும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட தனிப்பிரிவு போலீஸாரை கூண்டோடு இடமாற்றம் செய்து அவசரக் கடமையாற்றியது அம்மாவட்ட காவல் துறை தலைமை.

வடமாவட்டம் ஒன்றில், நீதிபதி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து தாய், தந்தையரை தாக்கி அங்கிருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது போல பல மாவட்டங்களிலும் தனிமையில் இருக்கும் வீடுகள் குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. குறிப்பாக, நகைக்கடைக் காரர்களின் வீடு, கடைகளைக் குறிவைத்து கொள்ளைகள் நிகழ்த்தப்படுகின்றன.

போதாக்குறைக்கு, போதைப் பொருட்கள் நடமாட்டமும் தங்கு தடையில்லாமல் தமிழகம் முழுவதும் இருக்கிறது. லாட்டரி தடைசெய்யப்பட்டு விட்டது என்றுதான் பெயரே தவிர குக்கிராமங்களில்கூட லாட்டரி விற்பனை கனஜோராக நடக்கிறது. மணல் குவாரிகளில் எவ்வித வரையறைகளும் இல்லாமல் நாளொன்றுக்கு அனுமதி பெறாமல் இஷ்டத்துக்கு இயற்கை வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகள் திறக்கும் முன்பாக திருட்டுத்தனமாக மது விற்று காசுபார்க்கும் கும்பல் ஊருக்கு ஊர் நடமாட்டத்தில் இருக்கிறது. இவை அனைத்துமே போலீஸுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

இவற்றை எல்லாம் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்களின் சுயலாபத்துக்காக கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்கள். அதற்கான விலையை அரசும் ஆள்பவர்களும் கொடுக்க வேண்டி இருக்கிறது. எதைச் சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல மறுப்பவர்கள், எதைச் சொன்னால் முதல்வரின் மனம் குளிருமோ அதை மட்டும் மேலே எடுத்துச் செல்வதாக அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

கோவை கொலையாளிகள்

கோவையில் கார் குண்டுவெடிப்பு நடந்த பிறகு அங்கு கொலை உள்ளிட்ட கொடுங் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதெல்லாம் யார் மூலமோ கோவை பகுதியில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் வன்முறைகளோ என்ற சந்தேகத்தையும் அச்சத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர் கொலைகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் எகிறிக் கொண்டிருந்த சமயத்தில் சேலத்தில் இருந்த முதல்வர் மாடர்ன் தியேட்டர் வாசலில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். இதில் குறைசொல்ல ஒன்றுமில்லை தான் என்றாலும் சட்டம் - ஒழுங்கு குறித்து தனது பொறுப்பில் இருக்கும் உளவுத்துறையினர் தரும் தகவல்கள் சரிதானா... அது சரி என்றால் பிறகேன் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன என்பது குறித்தும் முதல்வர் முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நீதிமன்ற வாசலிலேயே கொலை நடக்குமளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருக்காது.

தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் மெய்யாலுமே உங்களுக்குத் திரும்பதியாக இருக்கிறதா என்ற கேள்வியை திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் கேட்டோம்.

’’சட்டம் - ஒழுங்கை நிர்வகிப்பது என்றால் என்ன? ஒரு சம்பவம் நடக்கலாம். அது நடக்காமல் தடுத்திருக்க வேண்டும். அதை மீறி நடந்துவிட்டால் உடனடியாக அதில் ஈடுபட்டவர்கள் மீதும் அதற்குக் காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம் - ஒழுங்கை சரியாக நிர்வகிப்பதன் அர்த்தம்.

சூர்யா வெற்றிகொண்டான்

தமிழ்நாட்டில் தற்போது எங்கு தவறு நடந்தாலும் அதற்கு காரணமானவர்கள் எம்பி, எம்எல்ஏ-க்களாக இருந்தாலும், சாதாரண கட்சிக்காரர் என்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் அண்மையில் நடந்த கொலைச் சம்பவம் உள்ளிட்டவற்றில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு காவல்துறை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். இப்படி எந்த பாரபட்சமும் இல்லாமல் சட்டம்- ஒழுங்கை நிர்வகிக்கும் முதல்வருக்கு மக்கள் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம், சட்டம் - ஒழுங்கை நிர்வகிப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் பேசுவதை கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. தனது ஆட்சியில் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு அதை டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர் சட்டம் - ஒழுங்கு பற்றி பேசலாமா?

கோடநாட்டில் தங்கள் கட்சித் தலைவியின் பங்களாவிலேயே கொலை, கொள்ளை நடந்ததில் தொடர்புடையவர் என்று சொல்லப்படும் அவர், சட்டம் - ஒழுங்கு குறித்து பேசலாமா? பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், அமைச்சராக இருந்தவருடைய மகன் உள்ளிட்டவர்களே சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத எடப்பாடி பழனிசாமிக்கு இதைப் பற்றி பேச தகுதி இருக்கிறதா?

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணாமலை உள்ளிட்டவர்கள் சொல்லி முடிப்பதற்குள் அதை தமிழக அரசு என்ஐஏ-விடம் ஒப்படைத்தது. ஆனால், ஆதாரத்தை தருகிறோம் என்று சொன்ன அண்ணாமலை இதுவரை அப்படி எதையும் தரவில்லை. இவர்கள் எல்லாம் சுட்டிக்காட்டும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எதுவும் கெட்டுப்போய்விடவில்லை” என்று சொன்னார் அவர்.

அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்டத்துக்கே சென்று கள ஆய்வுகள் நடத்தும் முதல்வர், முக்கிய பிரச்சினையான சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் காவல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால் மட்டுமே தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இருக்கும்!

x