பூந்தமல்லி அருகே 2 ரசாயன லாரிகள் தீ பிடித்து எரிந்து சேதம்


பிரதிநிதித்துவப்படம்

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே தனியார் தொழிற்சாலையில் கண்டெய்னர் லாரியில் இருந்து ரசாயனம் இறக்கும் போது 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கண்டெய்னர் லாரியில் கேன்களில் தின்னர் என்ற ரசாயனம் கொண்டு வரப்பட்டது. கண்டெய்னர் லாரியில் இருந்து ரசாயன கேன்களை இறக்கி வேறு ஒரு லாரிக்கு தொழிலாளர்கள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ அதிக அளவில் பரவியதால் மற்றொரு லாரியிலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனை உடனடியாக அணைத்தனர்‌. இந்தநிலையில் அந்தத் தனியார் கம்பெனியின் அருகிலேயே வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. அதில் கண்டெய்னர் லாரிகள் உள்பட 40-க்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அந்த கம்பெனியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற லாரிகள் மற்றும் தொழில்சாலைக்கு உள்ளேயும் தீ பரவாமல் இருப்பதற்காக லாரி டிரைவர் சாதுரியமாகவும் விரைவாகவும் செயல்பட்டு லாரியை வேகமாக அங்கிருந்து ஓட்டிவந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள அணுகு சாலையில் நிறுத்தினார்.

இந்தநிலையில் கண்டெய்னர் லாரி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், ஆவடி, கோயம்பேடு, இருங்காட்டுக்கோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x