மதுரை: மதுரை மாவட்ட பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் குறித்து விசாரிக்க வந்த மாநிலப் பொதுச் செயலாளரிடம், 3 மாவட்டத் தலைவர்கள் மீதும் சரமாரி புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
தமிழக பாஜகவில் மதுரை மாவட்டம் மாநகர், புறநகர் மாவட்டம் என பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மதுரை புறநகர் மாவட்டம் கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த மாவட்டங்களில் தனது ஆதரவாளர்கள் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக, மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் மாநிலத் தலைமைக்கு புகார் அனுப்பினார். இப்புகார் தொடர்பாக, மாநிலத் தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக, மகா சுசீந்திரன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை மாவட்ட பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக விசாரிக்க, பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஏ.பி.முருகானந்தம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர், மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட, மண்டல் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார்.
இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், மாநகர் மாவட்டத் தலைவர் மகா சசீந்திரன் மீது 20-க்கும் மேற்பட்டோரும், கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் மீது 60-க்கும் மேற்பட்டோரும், மேற்கு மாவட்டத் தலைவர் சசிகுமார் மீது 50-க்கும் மேற்பட்டோரும் புகார் அளித்துள்ளனர். கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பொறுப்பு கேட்டு கிடைக்காதவர்கள், மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகளால் கண்டிக்கப்பட்டவர்கள் என ஏராளமானோர் புகார்களை அடுக்கியுள்ளனர்.
பாஜக மாவட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் கட்சியின் மைய குழுவிடம் ஏ.பி.முருகானந்தம் நேற்று கருத்து கேட்டார். பின்னர், மதுரை பாஜக உட்கட்சி பூசல் குறித்து மாநிலத் தலைமைக்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கை அடிப்படையில், கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பாஜகவினர் கூறியதாவது: மாவட்டத் தலைவர் பொறுப்புகளுக்கு வருவோர், காலங்காலமாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல் தனி அணி உருவாக்கி செயல்படுகின்றனர். சாதி பார்த்து பதவி அளிக்கின்றனர். இதனால் மதுரை பாஜகவில் பெரும் குழப்பம், உட்கட்சி பூசல் நிலவுகிறது. இப்பிரச்சினையை சரி செய்ய மாநிலத் தலைமையின் பிரதிநிதி வந்தி ருப்பது வரவேற்கத்தக்கது என்றனர்.