“திட்டங்களை சரியாக செயல்படுத்தாமல் மத்திய அரசு மீது திமுக அரசு பழி சுமத்துகிறது” - அண்ணாமலை


அண்ணாமலை | கோப்புப் படம்

கோவை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் தமிழக அரசுஆர்வம் காட்டுவதில்லை. திட்டங்களை சரியாக செயல்படுத்தாமல், மத்திய அரசு மீது தொடர்ந்து பழி சுமத்தி வருகிறது.

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளில், ஒரு மரத்தை அகற்றுவதற்கு தமிழக அரசு 8 மாத காலம் இழுத்தடித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படி பொறுப்பற்று செயல்பட்டால், திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும். இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்குவதில்லை என்று கூறுவது அரசியல் சார்ந்த கருத்தாகும்.

பட்ஜெட் பணிகளை மேற்கொள்ளும்போது, மத்திய, மாநில நிதி செயலாளர்கள் கலந்தாலோசித்து தான் நிதிப் பங்கீடுகளை மேற்கொள்கின்றனர். தமிழகம் எந்த வகையிலும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளைவிட, அதிக அளவு திட்டங்கள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

கிஷன் ரெட்டி

மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறும்போது, "2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக வளர்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே திட்டங்களுக்காக கடந்த ஆண்டைவிட ரூ.300 கோடி அதிகம்ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பெயர் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்பதால், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவதை ஏற்க முடியாது. மத்திய அரசின்திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்துவதில்லை" என்றார்.

x