கோவை / உதகை / சென்னை: நீலகிரி தொகுதி பாஜக முன்னாள் எம்.பி. மாஸ்டர் மாதன் (93) உடல்நலக் குறைவால் காலமானார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் காலனியில் வசித்து வந்த இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒருமகள் உள்ளனர். நீலகிரி மாவட்டம் இத்தலார் பகுதியைச் சேர்ந்த இவர் தமிழக பாஜக துணைத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். 1998, 1999-ல் நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்று, எம்.பி.யாகப் பதவி வகித்தார். உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு மாஸ்டர்மாதன் காலமானார்.
தகவலறிந்து வந்த ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி,தமிழக அமைச்சர் ராமச்சந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், கோவை, நீலகிரி மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் இரங்கல்: முன்னாள் எம்.பி. மாஸ்டர் மாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி , மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி: மாஸ்டர் மாதனின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சமூக சேவை முயற்சிகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: மாஸ்டர் மாதன் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. படுகா சமூகத்தைச் சேர்ந்த சிறந்த தலைவராக விளங்கிய அவர், தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா: மாஸ்டர் மாதன் சமுதாயமுன்னேற்றம், பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி, சித்தாந்தங்களை வலுப்படுத்த அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு பாஜகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தனது நற்குணங்களால் அனைத்து மக்களின் அன்பைப் பெற்ற மாஸ்டர் மாதன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
பாஜக மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி: தன்னலமற்ற பொது சேவைக்கு மாஸ்டர் மாதன் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கும், நீலகிரி மக்களின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட மாஸ்டர் மாதன் மறைவு தமிழக பாஜகவுக்கு பேரிழப்பு.