உதகை: உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நகரமே இருளில் மூழ்கியது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. உதகை, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குந்தா, குன்னூர் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது. மழையால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது. மண்சரிவுகளும் ஏற்பட்டன.
சனிக்கிழமை உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன. பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு உதகையின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
உதகை பிரிக்ஸ் பள்ளி அருகே மரம் ஒன்று விழுந்தது, உதகை கோத்தகிரி சாலையில் ஜீப் மீது மரம் விழுந்தது. சாலையிலும் இந்த மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி பிங்கர் போஸ்ட், குளிசோலை பகுதிகளிலும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். மரங்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வெட்டி அகற்றினர்.
கோடேரி, பெங்கால் மட்டம், கைகாட்டி , குன்னக்கம்பை, அதிகரட்டி, குந்தா பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலைகளில் மின்கம்பம் மீதும் சாலைகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.
உதகை அருகே முத்தோரை பாலடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதுமே கடும் குளிரும் நிலவுகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கம்பளி ஆடைகள் அணிந்து கொண்டே வெளியில் வருகின்றனர்.
உதகையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் சனிக்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரமே இரவில் மூழ்கியது. காலை வரை மின் விநியோகம் சீராகவில்லை இதனால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், ஞாயிறு காலை முதல் மழை ஓய்ந்தது என்றாலும் சூறாவளி காற்று வீசி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓவேலியில் 31 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் கோடநாடு 10மி.மீ., கிளன்மார்கன் 9 மி.மீ., அவிலாஞ்சி 6 மி.மீ., உதகை 5.5 மி.மீ., தேவாலா 5மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது.