ராமேசுவரம் / சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 9-வது நினைவுதினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்
ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் நேற்று காலை கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இதில், பாஜக தேசிய சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் ஜமால் சித்திக், செயலர் வேலூர் இப்ராஹிம், மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் மற்றும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அரசு சார்பில் அமைச்சர் மெய்யநாதன், ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங், எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகராட்சித் தலைவர் நாசர்கான், வட்டாட்சியர் அப்துல் ஜபார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, தர்மர் எம்.பி., நடிகர் தாமு, நடிகை அறந்தாங்கி நிஷா மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் புகழஞ்சலி: அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: அளப்பரிய சாதனைகள், கருத்துகள் வழியாக நம்மிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமை பெருமையுடன் நினைவு கூர்வோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சாதாரண குடும்பத்தில் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த கலாமின் வாழ்க்கைப் பயணம் ஊக்கமளிக்கக் கூடியது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த அப்துல் கலாம் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: கலாமின் பயணமானது, சுதந்திர இந்தியாவின் பயணம். அவரைப் போல, பல்வேறு குழந்தைகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்தியா வாழ்கிறது. இதேபோல, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.