மத்திய அரசு தரும் நிதியை முறையாக பயன்படுத்தவில்லை: தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு


சென்னை: மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம்சாட்டினார்.

தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில் 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கத்துக்கு சிந்தனையாளர் பிரிவு மாநில தலைவர் செல்வி தாமோதரன் தலைமை தாங்கினார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மாநில செயலாளர் பிரமிளா சம்பத்,மாவட்டத் தலைவர் சாய் சத்யன் உட்பட பாஜகவின் சிந்தனை பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இருக்க வேண்டும் என்றபிரதமர் மோடியின் கனவை நனவாக்கும்விதமாக பட்ஜெட் உள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஏஞ்சல்வரியில் பல்வேறு திருத்தங்கள்கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் சுமார் 500 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, சிஎஸ்ஆர் நிதியின் மூலம் அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது.

முத்ரா கடன் திட்டம், விஸ்வகர்மா திட்டம் உட்பட பல்வேறுதிட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டு, மக்கள்பயன்பெற்று கொண்டிருக்கின்றனர். இது புதிய வேலைவாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்.

தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பட்ஜெட் பங்கு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டும்கூட கிடைத்துள்ளது. மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை. மத்திய அரசிடம் இருந்து குறிப்பிட்ட திட்டத்துக்காக கிடைத்த நிதியை, அந்த திட்டத்துக்குதான் பயன்படுத்தினார்களா என தமிழக அரசு தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்துக்குதான் ரயில்வேக்கு அதிகமாக பட்ஜெட்டில் நிதி, ஆறு வந்தே பாரத் ரயில்கள்கிடைத்துள்ளன. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத்நிலையம் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படுகின்றன. மேலும், நெடுஞ்சாலை வசதிகள் உள்ளிட்டவேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பல திட்டங்கள் தென் மாநிலங்களுக்கு கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு அம்சத்திலும், தமிழகம் சமமாகவோ அல்லது அதிகமாகவோ வருகிறது. பாஜகவின் பட்ஜெட்டை விமர்சிக்க காங்கிரஸுக்குகூட எதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

x