புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வழக்கு தொடர இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்துவோம்: தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தகவல்


சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களையும் உடனே வாபஸ் பெறாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இந்திய பார் கவுன்சிலுக்கு அழுத்தம் கொடுப்போம் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தெரிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா, குற்ற விசாரணை முறைச்சட்டம் பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சிகள் சட்டம் பாரதிய சாக்க்ஷய அதிநியம் என பெயர் மாற்றம் செய்துள்ள மத்திய அரசு, அதில் பல்வேறு மாறுதல்களையும் செய்து கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரான வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மத்திய அரசை வலியுறுத்துகிறது. எந்தவொரு ஆய்வோ, விவாதமோ நடத்தாமல், குறிப்பாக பார் கவுன்சிலின் ஆலோசனைகளை கருத்தில்கொள்ளாமல் மத்திய அரசு தன்னிச்சையாக இந்த குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

இந்த குற்றவியல் சட்டங்கள் வானளாவிய அதிகாரங்களை காவல் துறைக்கு வாரி வழங்கியுள்ளது. சர்வாதிகார ரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள தனிநபர் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளன.

எனவே அனைத்து மாநில பார் கவுன்சில் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை அமைத்து இந்த 3 சட்டங்களையும் உடனடியாக திரும்பப்பெறும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென அகில இந்திய பார் கவுன்சிலுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதன்பிறகும் வாபஸ் பெறாவிட்டால் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர அழுத்தம் கொடுப்போம். இந்த சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் குழுவை அமைத்த தமிழக அரசின் முடிவுக்கும், இந்த சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளதற்கும் வரவேற்பு தெரிவிக்கிறோம்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தசெய்தியாளர் சந்திப்பின்போது பார் கவுன்சில் துணைத் தலைவர்வி.கார்த்திக்கேயன், இணைத் தலைவர் பி.அசோக் உடனிருந்தனர்.

x