தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது: ஜெயக்குமார் விமர்சனம்


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

’’தமிழகத்தில் சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. சட்ட-ஒழுங்கு மிகமிக மோசமடைந்துள்ளது. தினந்தோறும் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தமிழக காவல்துறை கைகள் கட்டப்பட்டு செயலிழந்துவிட்டது’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ‘’சி.பி.ராதாகிருஷ்ணன் நல்ல பண்பாளர். அதனால் அவரை அதிமுக சார்பில் வாழ்த்த வந்தேன். தமிழகத்தில் சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. சட்ட- ஒழுங்கு மிகமிக மோசமடைந்துள்ளது. தினந்தோறும் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கிறது.

கோவை நீதிமன்ற வளாகத்தில் கொலை நடந்து இருப்பது மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. கொலை, கொள்ளை நடந்தால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறும் நிலை உள்ளது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் உள்துறை செயலிழந்துவிட்டது. முதலமைச்சர் விழிப்புடன் இருந்து காவல்துறையை முடிக்கி விட்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் செயலிழந்து பொம்மை முதலமைச்சராக உள்ளார். எங்கள் ஆட்சியிலும் கொலைகள், கொள்ளைகள் இருக்கும். அது அங்கொன்று இங்கொன்றாக இருக்கும். இந்தமாதிரி ஒரே நாளில் 9 கொலைகள், நீதிமன்ற வளாகத்தில் கொலைகள் நடந்தது இல்லை. வரலாறு காணாத வகையில் சட்ட ஒழுங்கு சீர்க் கெட்டுவிட்டது. எங்களது ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. எங்களை குறைச்சொல்லாமல் கொலை, கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும்‘’ என்றார்.

x