“அரசு நிலங்களை ஆக்கிரமிப்போர் மீது கடும் நடவடிக்கை தேவை” - நாராயணன் திருப்பதி


நாரயணன் திருப்பதி | கோப்புப்படம்

சென்னை: ‘அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பழைய மகாபலிபுரம் சாலையில் செம்மஞ்சேரியில் அரசு நிலத்தை பாதுகாக்க வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிலங்களை வளைத்துப் போட்டுக்கொண்டு, நில ஆக்கிரமிப்பை செய்யும் சட்ட விரோத கும்பல்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடங்களை வளைத்துப் போட முயற்சிப்பவர்களை சிறையிலடைக்க வேண்டும். இந்தக் கும்பல்களின் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளில் பதவியில் இருந்தால், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

x