காஞ்சிபுரம்: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கே.சுந்தர் தலைமை தாங்கினார். மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த திமுகவினர் திரளாகப் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் காரணமாக காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை கையாள்வதிலும், ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்வதிலும் போலீஸார் திணறினர்.
காவலான் கேட் என்பது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதி. மாநில அரசிடம் கோரிக்கையை வலியுறுத்துபவர்கள் மற்றும் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் இந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். மத்திய அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் பெரும்பாலும் தபால் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் அருகே தான் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.
மத்திய அரசைக் கண்டித்து திமுக நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தை ஏன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.