பணியிட மாறுதல் பெற்ற பள்ளி ஆசிரியர்கள் - தொடக்க கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!


சென்னை: கலந்தாய்வில் இடமாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் புதிய பணியிடத்தில் சேரும் வகையில், அவர்களை தற்போது பணிபுரியும் பள்ளியிலிருந்து விடுவிக்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ’நிகழ் கல்வியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த கடந்த ஜூன் 22ம் தேதி அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்த அட்டவணையின்படி ஜூலை 22 முதல் 24ம் தேதி வரை எமிஸ் தளம் வழியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் புதிய பணியிடத்தில் சேரும் வகையில் அவர்களை தற்போது பணிபுரியும் பள்ளியிலிருந்து விடுவிக்கவும், பணிபுரிந்த பள்ளியில் மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வில் 2,500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

x