மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 94,000 கன அடியாக உயர்வு: 100 அடியை எட்டியது


மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து, நீர்மட்டம் 405 நாட்களுக்குப் பிறகு 100 அடியை எட்டியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. குறிப்பாக காவேரி ஆற்றின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை மற்றும் நுகு அணை ஆகியவை முழுமையாக நிரம்பியுள்ளன. இதனால் அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல் பகுதிக்கு சுமார் 84,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 1.15 லட்சம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவேரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 12வது நாளாக ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல்களில் பயணிக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்த தண்ணீர் முழுவதும் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.10 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 45 ஆயிரத்து 598 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை அணைக்கு 94 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காலை 9.15 மணியளவில் 405 நாட்களுக்குப் பிறகு 100 அடி நீர்மட்டத்தை எட்டியது. இதனால் அணை விரைவில் முழு கொள்ளளவான 120 அடி மற்றும் 93.4 டிஎம்சியை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 4ம் தேதி 39.67 அடியாக இருந்தது. தொடர் நீர்வரத்து காரணமாக 23 நாட்களில் 60 அடி நீர்மட்டம் உயர்ந்து தற்போது 100 அடியை அணை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x