நிதியமைச்சரின் பதவிப்பிரமாணத்துக்கே முரணானது: வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்


சென்னை: மத்திய பட்ஜெட்டில் பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது நிதியமைச்சரின் பதவி பிரமாணத்திற்கே முரணானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணியில் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு மாநில முதலமைச்சர்களும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, கேரளா முதலமைச்சர் பிணராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. இவ்வளவு ஆண்டுகளாக ஒப்புக்காவது ஒரு திருக்குறளை சொல்லி பட்ஜெட்டை வாசித்தார்கள். இந்த முறை திருவள்ளுவரும் கசந்து போய்விட்டார் போல. இப்படிப்பட்ட பட்ஜெட்டில் திருக்குறள் இடம் பெறாதது ஒருவகையில் நிம்மதி தான்.

இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தோம். ஆனால் தங்களின் பதவி நாற்காலிக்கு கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காக உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களை பழிவாங்க உருவாக்கியிருக்கிறார்கள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி நிதியமைச்சர் ஏற்றுக்கொண்ட பதவி பிரமாணத்துக்கே முரணானது.

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவோம் என கையெழுத்து போட்டால் தான் நிதியை விடுவிப்போம் என்று அடம் பிடிக்கிறது மத்திய அரசு. மாணவ மாணவிகளின் கல்வி பாழாகுமே? ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே? என ஒரு துளி கூட மத்திய அரசுக்கு கவலை இல்லை. தங்களின் கொள்கை திணிப்பையும், இந்தி திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாக தான் பாஜக அரசு இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநில மக்கள் பாஜகவை புறக்கணித்தார்கள். அந்த மாநில மக்களை பழி வாங்குகிற பட்ஜெட்டாகத் தான் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

x