அடிப்படை விதிகளின்றி தயாரிக்கப்படும் தேசிய கொடியை எந்த நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்


சென்னை: மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன்.சோமு,‘‘சீனாவில் இருந்து இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டிருக்கிறதா? மற்ற பொருட்களை எவ்வளவு மதிப்புக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம்? எந்த நாட்டிலிருந்தும் இதையெல்லாம் இறக்குமதி செய்யக்கூடாது என்று தடை செய்யப்பட்ட பொருட்கள் உண்டா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: சீனா, தைவானில் இருந்து எந்தப்பொருட்களையும் இறக்குமதி செய்யக்கூடாது என்று எந்தத் தடையும்விதிக்கப்படவில்லை. நம் நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத்துக்கு எவை தேவையோ அதை இந்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம். கடந்த 2023-24-ம் நிதியாண்டில் சீனாவில் இருந்து மட்டும்ரூ.8.42 லட்சம் கோடிக்கு பொருட்கள் இறக்குமதி செய்துள்ளோம். இது நாட்டின் மொத்த இறக்கு மதியில் 15 சதவீதமாகும்.

கட்டுப்படுத்தப்பட்டவை, தடைசெய்யப்பட்டவை என இரண்டு வகை பொருட்களில், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை உரிய அதிகார அமைப்புகளிடம் இருந்து உத்தரவு அல்லது அனுமதி பெற்ற பின்பே இறக்குமதி செய்ய வேண்டும். தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பொருட்களை உலகின்எந்த நாடுகளில் இருந்தும் எந்தச் சூழலிலும் இறக்குமதி செய்ய முடியாது.

அந்த வகையில், பிரதானமாக நமது நாட்டின் தேசியக் கொடி இருக்கிறது. எந்த அளவானாலும், மூன்று மடங்கு நீளம், இரண்டு மடங்கு உயரம் அல்லது அகலம் கொண்டதாகவும், செவ்வக வடிவிலும் இருக்க வேண்டும், குறைந்தபட்ச அழகு ஒப்பனை செய்யப்பட்டதாக தேசியக் கொடி இருக்க வேண்டும். இந்த அடிப்படை விதிகளைக் கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எந்த நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது.

வாடகைத் தாய் மற்றும் செயற்கை கருத்தரிப்பு தொடர்பான சட்டங்களின்படி கருமுட்டை மற்றும் இனப்பெருக்க செல்களை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது. எலெக்ட்ரானிக் சிகரெட் உட்பட அதேபோன்று செயற்கை புகையை உண்டாக்கும் எந்த சாதனத்தையும் இறக்குமதி செய்ய முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x